அனுர மீடர் (Anura Meter) என்பது 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வழங்கப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒரு இணையவழி கண்காணிப்பான். அதிக பொதுநலன் சார்ந்ததாகக் கருதப்படும், பொருளாதார சீர்திருத்தங்கள், நல்லாட்சி, ஊழல் எதிர்ப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய 22 வாக்குறுதிகள் கண்காணிப்புக்காகத் தெரிவுசெய்யப்பட்டன.
Manthri.lk குழு, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளின் முழுப் பரப்பளவையும் ஆரம்பத்தில் பகுப்பாய்வு செய்தது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தேர்தல் அறிக்கை 1,325 வாக்குறுதிகளைக் கொண்டிருந்தது. இவற்றில், 947 வாக்குறுதிகளுக்கு அவதானிக்கக்கூடிய தொடர்புடைய செயற்பாடு இருந்ததுடன், அதில் 378 வாக்குறுதிகள் 'கண்காணிக்கக்கூடியவை'. இந்த பட்டியலை அணுகவும், கண்காணிக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி மேலும் அறியவும், 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானைப் (Manifesto Match tracker) பார்ப்பதுடன் அதிலுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பகுதியையும் பார்க்கவும்.
Manthri.lk குழு ஆரம்பத்தில் கண்காணிக்கக்கூடிய 378 வாக்குறுதிகள் அனைத்தையும் அனுர மீட்டரில் சேர்க்க முயன்றது. இருப்பினும், அவற்றை திறம்பட கண்காணிப்பதற்கு அது அதிக வளங்கள் தேவைப்படும் பணியாக இருந்திருக்ககூடும் என்பதால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள், நல்லாட்சி, ஊழல் எதிர்ப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பான வாக்குறுதிகளை மட்டும் கருத்தில் கொள்ள முடிவு செய்தோம். இதன் மூலம் வாக்குறுதிகளின் எண்ணிக்கை 171 ஆகக் குறைந்தது.
இந்த 171 வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, தொடர்புடைய அரசாங்க அமைச்சுளுக்கும் நிறுவனங்களுக்கும் 41 தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைகளைச் சமர்ப்பித்தோம். இதில் 23 RTI கோரிக்கைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன, அவற்றில் 15 மட்டுமே பயன்படுத்தக்கூடிய தகவல்களை வழங்கின. அரசாங்கத்திடமிருந்து கிடைத்த குறைந்தளவிலான பதில்கள் காரணமாக, அதிக உயர் பொதுநலன் சார்ந்த 22 வாக்குறுதிகளை மட்டும்
உள்ளடக்கிய ஒரு சிறிய எண்ணிக்கையான வாக்குறுதிகளைக் கண்காணிப்பதன் மூலம் தொடங்க குழு முடிவு செய்தது – ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
Manthri.lkயானது அனுர மீட்டரில் கண்காணிக்கப்படும் வாக்குறுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்க்கிறது. பொதுமக்கள் வெளிப்படுத்தும் ஆர்வம் மற்றும் தகவல்களை அணுகும் மேம்பட்ட வசதி ஆகியவற்றின் அடிப்படையில் இதைச் முன்னெடுப்போம்.
நாம் எவ்வாறு முன்னேற உத்தேசித்துள்ளோம் என்பது பின்வருமாறு: தற்போதுள்ள 5 கருப்பொருள்களின் கீழ் ஒரு புதிய வாக்குறுதியைச் இணைப்பதற்கு நீங்கள் Change.org இல் ஒரு மனுவைத் ஆரம்பித்து அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அந்த மனுவுக்கு ஆதரவு கிடைத்தால் – அதாவது, குறைந்தபட்சம் 500 கையொப்பங்கள் கிடைத்தால், அதிகப் பார்வைக்கு உதவும் வகையில், மூன்று மாதங்களுக்கு Manthri.lk தளத்தில் அந்த மனு இணைப்படும். அந்த நேரத்தில் கணிசமான பொது மக்களின் ஆதரவு கிடைத்தால், குறைந்தபட்சம் 5,000 கையொப்பங்கள் கிடைத்தால், அதை நாங்கள் கண்காணிப்பான் பட்டியலில் இணைப்போம்.
இந்த வாக்குறுதிகளின் முன்னேற்றம், அரசாங்கத்திடமிருந்தோ அல்லது பிற தொடர்புடைய மூலங்களிலிருந்தோ தகவல்கள் கிடைத்தவுடன் புதுப்பிக்கப்படும். கண்காணிப்பானில் உள்ள "தகவல் பங்களிப்பு" (Contribute Information) பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள பொதுமக்களை அழைக்கிறோம். நீங்கள் வழங்கக்கூடிய வேறு ஏதேனும் உதவி அல்லது நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு, தயவுசெய்து manthri@veriteresearch.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
பொதுமக்கள் எங்களுடன் ஈடுபடுவதற்கான திறனை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவதுடன், அனுர மீட்டரில் கண்காணிக்கப்படும் விடயங்களின் நோக்கத்தையும் மேம்படுத்துவோம். நீங்கள் வழங்கும் உதவியை நாங்கள் வரவேற்பதுடன் நன்றி கூறுகிறோம்.
வறுமை, பாதிப்பு மற்றும் பாகுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள், திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகள்
முதலீடு, வர்த்தகம், பொது நிதி மற்றும் வரிச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துதல்
அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக அரசாங்கத்திற்குள் முடிவெடுக்கும் செயல்முறைகள், ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவ அமைப்புகள்
பொது நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளுக்குள் ஊழல் நடைமுறைகளைத் தடுக்க, கண்டறிந்து தண்டனை வழங்க அமைப்புகள் மற்றும் சட்ட கட்டமைப்புகளை செயல்படுத்துதல்
கடந்த கால அரசியல் வன்முறைகளுக்கு நீதி வழங்குதல், உயர்மட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல்
அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மூலங்களில் இருந்து பொது வெளியில் கிடைக்கும் இணையத் தகவல்கள்
தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைகளுக்கான அரசாங்கத்தின் பதில்கள்
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டு வெரிட்டே ரிசர்ச்சில் உள்ள பாராளுமன்ற ஆராய்ச்சி குழுவால் சரிபார்க்கப்பட்ட புதுப்பிப்புகள்
எங்கள் மூலங்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் அரசாங்கத்தால் செய்யப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றம் குறித்த சரிபார்க்கப்பட்ட தகவல்களை வழங்கும் பொதுவில் அணுகக்கூடிய பதிவுகள் ஆகும். இந்த ஆதாரங்களில் சில அமைச்சரவை முடிவுகள், பட்ஜெட் ஆவணங்கள், வர்த்தமானி ஆவணங்கள், சட்டங்கள், ஆண்டு அறிக்கைகள் மற்றும் அரசாங்க வலைத்தளங்களில் கிடைக்கும் தரவுகள் ஆகியவை அடங்கும், அரச அதிகாரிகளால் வெளியிடப்படும் கருத்துகள் அதிகாரப்பூர்வ ஆதாரங்களாகக் கருதப்படுவதில்லை.
கண்காணிப்புக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட 22 வாக்குறுதிகள், தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிக பொது நலன் சார்ந்த மிக முக்கியமான கூறுகள் குறித்த எங்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்தவை. இது ஒரு சிறந்த முயற்சியாகும், இதில் சிறிய தவறுகள் மற்றும் மேற்பார்வைகள் ஏற்படக்கூடும். ஏதேனும் கவனக்குறைவான பிழைகளுக்கு திருத்தங்களை மேற்கொள்ள எங்களுக்கு உதவுமாறு பொதுமக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
இந்த தளத்தில் ஒரு வாக்குறுதியைச் சேர்ப்பது அல்லது தவிர்ப்பது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படக்கூடாது. அனுர மீட்டர் மூலம் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தும் எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் அவர்களின் ஈடுபாடு மற்றும் விளக்கத்தின் அடிப்படையில் அளிக்கும் எந்தவொரு கருத்துகள், பார்வைகள், முடிவுகள் போன்றவற்றுக்கு வெரிட்டே ரிசர்ச் பொறுப்பேற்காது.